Monday, 26 September 2011

அதிகாரம் 3: நீத்தார் பெருமை

1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.



ஒழுக்கத்து நீத்தார் - நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை     ஒழித்தவர்கள் 
பெருமை - புகழ்
விழுப்பத்து வேண்டும் - (விளம்புவதற்கு) கூறுவதற்கு தேவை
பனுவல் துணிவு - நூல்களின் (புத்தகங்களின்) துணிவு (அல்லது பெருமை)


நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை ஒழித்தவர்களுடைய பெருமையை எடுத்துரைப்பதே நூல்களின் (எழுத்தாளரின்) துணிவு (அல்லது பெருமை) ஆகும்.


அல்லது


நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை ஒழித்தவர்களுடைய பெருமையை எடுத்துரைப்பதற்கு நூல்களிற்கு (புத்தகங்களிற்கு அதாவது எழுத்தாளரிற்கு) துணிவு வேண்டும்.


2.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

துறந்தார் - உலகப் பற்றுக்களைத் துறந்தவர்கள்
துணைக்கூறின் - அளவிட்டுக் கூறினால்
வையத்து - உலகத்தில்
இறந்தாரை - இறந்தவர்களை

உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களுடைய பெருமையினை அளவிட்டுக் கூறப்போனால் அது இந்த உலகத்தில் இறந்தவர்களது எண்ணிக்கையைக் கணக்கிடுவது போன்றதாகும்

அதாவது

இந்த உலகத்தில் இறந்தவர்களது எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிட முடியாதோ அதேபோலஉலகப் பற்றுக்களைத் துறந்தவர்களுடைய பெருமையினையும் அளவிட்டுக் கூறமுடியாது.

3.  இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இருமை வகை - நன்மை, தீமை 


நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிந்து நன்மைகளைச் செய்பவரே இந்த உலகில் பெருமைக்குரியவர்களாகிறார்கள்.



4. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
  வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.


உரன் - உறுதியென்ற
தோட்டியான் - அங்குசத்தால்
ஓரைந்தும் = ஓர் + ஐந்தும் - ஐந்து பொறிகளையும்
வரன் - துறவறம் - வரமாகிய வீடுபேறு
வித்தது - வித்து + அது - விதை போன்றவன்

உறுதியென்ற அங்குசம் கொண்டு, மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.


5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
  இந்திரனே சாலுங்கரி.


ஐந்தவித்தான் - ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவன்
ஆற்றல் - வலிமை
அகல்  - அகன்ற
விசும்புளார் கோமான் - வானத்திலிருக்கின்ற அரசன் = இந்திரன்
சாலுங்கரி - சான்றா கக் கூறகூடியவன் ஆவான்


அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.


6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலாதார்.


செயற்கரிய - செய்வதற்கு அரிய 


செய்வதற்கு அருமையான பெருமை தரும் செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அருமையான  செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.


7. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
   வகை தெரிவான் கட்டே உலகு.


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை  அறிய வல்லவனுடைய  வசப்பட்டதே இவ்வுலகம்.


8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டி விடும்.


நிறைமொழி நிறைவான வாக்குப் பெருமை
மாந்தர் - மனிதர்
மறைமொழி - அறவழி நூல்கள் - மந்திர சொற்கள்


நிறைவான வாக்குப் பெருமை உடைய சான்றோர்களின் பெருமையை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன அறவழி நூலகள் மூலம் கூறிய மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

9. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
   கணமேயும் காத்தல் அரிது.


வெகுளி - கோபம்
கணம்  - விநாடி

இருவகையான கருத்து:
1. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் என்பது மிகவும் (அரிதாகும்) கடினமாகும்.

2. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர்கள், ஒரு கணப் பொழுதேனும் தமது கோபத்தை நிலைநிறுத்துவது  மிகவும் (அரிதாகும்) கடினமாகும்.

10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுகலான்.

அறவோர் - அறம் செய்வோர் - தர்மசீலர்கள்

மற்றெவ்வுயிர்க்கும் - மற்ற + எவ் + உயிர்க்கும் - மற்ற எல்லா உயிர்க்கும்
செந்தண்மை - இரக்கம்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே தர்மசீலர்கள். அவரே அந்தணர் எனப்படுவர்.


 நீத்தார் பெருமை முற்றும்

No comments:

Post a Comment