Monday, 26 September 2011

அதிகாரம் 3: நீத்தார் பெருமை

1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.



ஒழுக்கத்து நீத்தார் - நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை     ஒழித்தவர்கள் 
பெருமை - புகழ்
விழுப்பத்து வேண்டும் - (விளம்புவதற்கு) கூறுவதற்கு தேவை
பனுவல் துணிவு - நூல்களின் (புத்தகங்களின்) துணிவு (அல்லது பெருமை)


நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை ஒழித்தவர்களுடைய பெருமையை எடுத்துரைப்பதே நூல்களின் (எழுத்தாளரின்) துணிவு (அல்லது பெருமை) ஆகும்.


அல்லது


நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை ஒழித்தவர்களுடைய பெருமையை எடுத்துரைப்பதற்கு நூல்களிற்கு (புத்தகங்களிற்கு அதாவது எழுத்தாளரிற்கு) துணிவு வேண்டும்.


2.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

துறந்தார் - உலகப் பற்றுக்களைத் துறந்தவர்கள்
துணைக்கூறின் - அளவிட்டுக் கூறினால்
வையத்து - உலகத்தில்
இறந்தாரை - இறந்தவர்களை

உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களுடைய பெருமையினை அளவிட்டுக் கூறப்போனால் அது இந்த உலகத்தில் இறந்தவர்களது எண்ணிக்கையைக் கணக்கிடுவது போன்றதாகும்

அதாவது

இந்த உலகத்தில் இறந்தவர்களது எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிட முடியாதோ அதேபோலஉலகப் பற்றுக்களைத் துறந்தவர்களுடைய பெருமையினையும் அளவிட்டுக் கூறமுடியாது.

3.  இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இருமை வகை - நன்மை, தீமை 


நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிந்து நன்மைகளைச் செய்பவரே இந்த உலகில் பெருமைக்குரியவர்களாகிறார்கள்.



4. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
  வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.


உரன் - உறுதியென்ற
தோட்டியான் - அங்குசத்தால்
ஓரைந்தும் = ஓர் + ஐந்தும் - ஐந்து பொறிகளையும்
வரன் - துறவறம் - வரமாகிய வீடுபேறு
வித்தது - வித்து + அது - விதை போன்றவன்

உறுதியென்ற அங்குசம் கொண்டு, மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.


5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
  இந்திரனே சாலுங்கரி.


ஐந்தவித்தான் - ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவன்
ஆற்றல் - வலிமை
அகல்  - அகன்ற
விசும்புளார் கோமான் - வானத்திலிருக்கின்ற அரசன் = இந்திரன்
சாலுங்கரி - சான்றா கக் கூறகூடியவன் ஆவான்


அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.


6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலாதார்.


செயற்கரிய - செய்வதற்கு அரிய 


செய்வதற்கு அருமையான பெருமை தரும் செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அருமையான  செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.


7. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
   வகை தெரிவான் கட்டே உலகு.


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை  அறிய வல்லவனுடைய  வசப்பட்டதே இவ்வுலகம்.


8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டி விடும்.


நிறைமொழி நிறைவான வாக்குப் பெருமை
மாந்தர் - மனிதர்
மறைமொழி - அறவழி நூல்கள் - மந்திர சொற்கள்


நிறைவான வாக்குப் பெருமை உடைய சான்றோர்களின் பெருமையை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன அறவழி நூலகள் மூலம் கூறிய மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

9. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
   கணமேயும் காத்தல் அரிது.


வெகுளி - கோபம்
கணம்  - விநாடி

இருவகையான கருத்து:
1. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் என்பது மிகவும் (அரிதாகும்) கடினமாகும்.

2. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர்கள், ஒரு கணப் பொழுதேனும் தமது கோபத்தை நிலைநிறுத்துவது  மிகவும் (அரிதாகும்) கடினமாகும்.

10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுகலான்.

அறவோர் - அறம் செய்வோர் - தர்மசீலர்கள்

மற்றெவ்வுயிர்க்கும் - மற்ற + எவ் + உயிர்க்கும் - மற்ற எல்லா உயிர்க்கும்
செந்தண்மை - இரக்கம்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே தர்மசீலர்கள். அவரே அந்தணர் எனப்படுவர்.


 நீத்தார் பெருமை முற்றும்

Friday, 12 August 2011

அதிகாரம் 2: வான் சிறப்பு

1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


வான்நின்று - வானத்திலிருந்து (வரும் மழையைக் குறிக்கும்)

உரிய காலத்தில் மழை பெய்வதால்தான் உலகம் சிறப்பாக இயங்கி வருகிறது; அதனால் மழையை அமுதம் என்று கூறலாம்.

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்கு - உண்பவர்க்கு (சாப்பிடுபவர்க்கு) - அதாவது உண்ணும் உயிரினங்களுக்கு
துப்பாய - உண்ணக்கூடிய (சாப்பிடக்கூடிய)
துப்பாக்கி - உணவாக்கி (சாப்பாடாக்கி) - உணவை விளைவைத்து 

உண்பவர்க்கு (உயிர்களுக்கு) சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும்.

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.

விண்இன்று - ஆகாயத்தில் இருந்து (வரும் மழை)
பொய்ப்பின் - பொய்க்குமானால் (பெய்யாது விட்டால்)
உடற்றும் - வருத்தும்.
விரிநீர்  - பரந்த நீர் (கடல்)

 உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால்,  (பரந்த - நீர் நிறைந்த)  கடலால் சூழப்பட்ட உலகமாயினும், பசி தோன்றி இந்த உலகத்தினுள்ளே நின்று வருத்தும்.


5. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.

  ஏரின் - ஏரிலிருந்து
  உழாஅர் - உழமாட்டார்
  உழவர் - கமக்காரர்
  புயல் என்னும் - மழை என்னும் 
  வாரி - வருவாய்
  வளங்குன்றி - வளம் குன்றி
  கால் - விட்டால்


  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( பயிர் விழைவிக்கும்) கமக்காரர் ஏர் மூலம் உழ மாட்டார்கள்.



5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 


கெடுப்பதூஉம் - கெடுப்பதுவும் (பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும்)


பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும் மழையே; அதேபோல் (ஒழுங்காக பெய்து) கெட்டவர்களுக்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைப்பதுவும் மழையே.

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

விசும்பு - மேகம்
விசும்பின் - மேகத்திலிருந்து
துளி - மழைத்துளி
வீழின் அல்லால் -  விழுந்தாலன்றி (விழாவிட்டால்)
காண்பு அரிது - காண்பது அரிது (காணமுடியாது)


வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால், உலகத்தில் பசுமையான புல்லின் தலையைக் கூட காண முடியாது.


7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
   தான்நல்கா தாகி விடின்.


தடிந்தெழிலி - அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு
தான்நல்காது ஆகி விடின் - தான் கொடுக்காது விட்டால் (அதாவது கடல் தனது நீரைக் கொடுக்காது விட்டால்)

 தன்நீர்மை - வளம்.

மழை பெய்வதற்காக, மேகமானது கடல் நீரை அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு, கடலானது நீரை வழங்காது விட்டால், அந்த நெடுங்கடலும் கூட வளம் குன்றிப் போகும்.

( மறை பொருள் - கற்றோர் தாம் கற்ற கல்வியை சமுக முன்னேற்றத்துக்கு உபயோகிக்காவிட்டால் அது கற்றவர்களுடைய புகழையும் மங்கவைக்கும்.)


8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானோர்க்கும் - தேவர்களுக்கும்
சிறப்பொடு - சிறப்பாக
பூசனை - பூசைகள்
செல்லாது - நடக்காது
வானம் வறக்குமேல் - வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்)


வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்) தேவர்களுக்கும் கூட சிறப்பாக பூசைகள் நடக்காது. 


( மறை பொருள் - மழை பெய்யாவிட்டால் உலகில் எதுவுமே சிறப்பாக நடைபெறாது)


9தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

தானம் - தருமம்
தங்கா - நிலைக்காது 
வியன் உலகம் - விரிந்த இவ்வுலகம்
வானம் 
வழங்கா தெனின் - மேகம் கொடுக்காவிட்டால் (அதாவது மழை பெய்யாவிட்டால்)

மழை பெய்யாவிட்டால், பிறருக்காக வழங்கும் தருமமோ அல்லது தனக்காகச் செய்யும் தவமோ இந்த விரிந்த உலகத்தில் இல்லாது போய்விடும்.

10. நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.



நீர் இன்று - நீர் இல்லாமல்
வான்இன்று - மேகம் இல்லாமல்
ஒழுக்கு - மழை

நீர் இல்லாமல் இந்த உலகம் இயங்காது அதேபோல மேகம் வழங்காமல் மழை கிடைக்காது.


                         வான் சிறப்பு முற்றும்
                               
                               மீண்டும் முகப்புக்கு

Wednesday, 3 August 2011

அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் "அ" (அகரம்) முதலெழுத்து போல இந்த உலகுக்கு இறைவனே முதன்மையானவன்.


2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


இறைவனுடைய திருவடிகளை வணங்காமல் இருப்பாராயின் அவர் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன (ஒன்றுமில்லை).


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மலர்களிலே வீற்றிருக்கின்ற அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்கள் (அதாவது முத்தி அடைந்தவர்கள்) தேவலோகத்தில் எப்போதும் வாழ்வார்கள்.


4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லாத அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் என்பதே இல்லை.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இறைவனுடைய கருத்தாழம் மிக்க புகழை விரும்பி நினைப்பவர்களை -  குழப்பத்தை உருவாக்கும் நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரு வினைகளும் அணுக மாட்டாது.


6.  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


(கண் காது மூக்கு நாக்கு தோல் என்கின்ற) ஐம்புல ஆசைகளையும் அடக்கிய இறைவனுடைய பொய் இல்லாத சிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்வார்கள்.

7.  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


எவரையும் தன்னுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள அந்த இறைவனது திருவடிகளை நினைப்பவர்களுக்கு மட்டுமே மனக் கவலைகளைப் போக்க முடியும். மற்றவர்க்கு (அவ்வாறு இறைவனது திருவடிகளை நினையாதவர்களுக்குமனக்கவலையைப் போக்க முடியாது.


8. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அறக்கடலாக (தருமப் பிரபுவாக) விளங்கும் அந்த இறைவனது திருவடிகளை  டைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை நீந்துவது சுகமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. அவ்வாறு இறைவனது திருவடிகளை  அடையாதவர்களுக்கு  மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை
நீந்துவது கடினமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பர்.


9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


எட்டு குணங்களையும் உடைய அந்த இறைவனது திருவடிகளை வணங்காத தலைகள், கேட்காத செவி (பார்வையில்லாத கண்) முதலியன போன்று பயனற்றவையாகும்.


10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவனது திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலைக் கடப்பர். அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலை கடக்க மாட்டார்கள். அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்களுக்கு மறுபிறப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும். 


கடவுள் வாழ்த்து முற்றும்

மீண்டும் முகப்புக்கு